தேவை அதிரடி ஆய்வு!
2009 நாடாளுமன்ற தேர்தல் மதவாத சக்திகளையும் பிராந்திய கட்சிகளையும் வீழ்த்தி முடக்கி மூலையில் வைத்து விட்டது. இது தேசிய அளவிலான தீர்ப்பு. மக்கள் மதவாதத்திற்கு எதிராகு மிக தீர்க்கமாகவே தீர்ப்பளித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது.
எதிர்காலப் பிரதமர்களாக தங்களை வர்ணித்துக் கொண்டவர்களின் நிலை தங்களது தற்போதைய அந்தஸ்தை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்னும் நிலையில் கொண்டு போய் அவர்களை விட்டிருக்கிறது.
1991க்குப் பிறகு முதன்முறையாக ஒரு தேசிய கட்சி 200க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்ற்றியது. 2004ல் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியது. இவையெல்லாம் காங்கிரஸ் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் விளைவாக இந்த வெற்றி கிடைத்தது என காங்கிரஸ்காரர்கள் கூறினாலும் பாஜகவை புறக்கணிக்க நினைக்கும் இந்திய மக்களின் தற்காலிக மாற்று ஏற்பாடாகவே இது அமைந்திருக்கிறது என்பதை தற்போது வெற்றி பெற்றிருப்பவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.இந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் பிரநிதித்துவம் கடந்த தேர்தல விட குறைந்திருப் பதை ஆரோக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30 பேர் மட்டுமே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சமூக நலன்நாடுபவர்களால் ஜீரணிக்க முடியாது.
2009 தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பு பின் மூலம் முஸ்லிம் சமூகம் பலன் அடைய அநேக வாய்ப்புகள் உண்டு என பரவலாக பேசப் பட்டது. ஏனெனில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல தொகுதிகள் தனித் தொகுதிகளாக இருந்தன. தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் அவை பொதுத் தொகுதிகளாவிட்டன. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு இது என கூறப்பட்டவை பொய்த்துப் போயின.2009 நாடாளுமன்ற தேர்தலில்தான் செல்வாக்கு மிகுந்த சிறுபான்மை தலைவர்கள் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்திருக்கிறார்கள்.பகுஜன் சமாஜின் ஷஹீத் சித்தீக், தேசியவாத காங்கிரஸின் தாரிக் அன்வர், சமாஜ்வாதி கட்சயின் ரசீத் மசூத், காங்கிரஸின் ஏ.ஆர். அந்துலே, சி.கே. ஜாபர் ஷெரீப், நூர்பானு, மவுதூத் மதானி, சலீம் ஷெர்வானி, அக்பர் அஹ்மத் டம்பி, டாக்டர் ஜாவீத் அக்தர், அஃப்சல் அன்சாரி, இல்யாஸ் ஆஸ்மி, ஷஹீத் அஹ்லாக், ஏ.ஏ. பாத்திமி உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.ஹைதராபாத்தில் அசதுத்தீன் உவைசியை எதிர்த் துப் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளரும் பிரபல உருது ஊடகத்தின் ஆசிரியருமான ஷஹீத் அலிக் கான் உவைசியை எதிர்த்து போட்டியிட்டதால் தோல்வியடைய வேண்டியதாயிற்று.
ஒரே தொகுதியில் ஒரே சமுதாயத்திதைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியிடுவதால் சமுதாயத்துக்கோ இந்த தேசத்துக்கோ என்ன பலன் விளையப் போகிறது? 60 ஆண்டுகளாகியும் இம்மாதிரியான அவலநிலைகள் தீரும் வழியைக் காணோம். தற்போதைய நாடாளு மன்றத்தில் ஃபரூக் அப்துல்லா, சல்மான் குர்ஷித் அத்தர் மணம் கமகமக்கச் சென்றிருக்கும் பத்ருதீன் அஜ்மல் போன்றோர் மட்டுமே பிரபல முகங்களாக தென் படுகிறார்கள். வழக்கமாக முஸ்லிம்களை அதிக அளவு நாடாளு மன்றத்திற்கு அனுப்பும் முலாயமின் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ஒரு முஸ்லிம் கூட நாடாளுமன்றம் செல்லவில்லை. முலாயம் கல்யாண் சிங் அதீத நெருக்கம் சர்ச்சைகளை சகட்டுமேனிக்கு பற்ற வைத்தது.
சமாஜ்வாதி கட்சி 23 நாடாளுமன்ற தொகுதி களைக் கைப்பற்றியது. உத்திரப் பிரதேச அரசியல் நிலவரத்தை பொறுத்த அளவில் முலாயமின் அரசியல் முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு பெரும் உதவி புரிந்தது. தனது சமூகத்தின் 7 சதவீத வாக்குகள் மட்டும் அவருக்கு போதாது என்ற நிலையில் முஸ்லிம் களின் 21 சதவீத வாக்குகள் முலாயமை முன்னேற்றியது.இருப்பினும் கல்யாண்சிங்கோடு முலாயம் குலாவியது அவரது பிரதமர், துணைப் பிரதமர்,மத்திய அமைச்சர் மற்றும் முதல்வர் கனவினை கலைத்துப் போட்டது. முஸ்லிம் எம்.பிக்கள் 1980ல் 48பேர் அவையை அலங்கரித்தார்கள். 1984ஆம் ஆண்டில் கூட 41 முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தார்கள்.2004ல் 36 முஸ்லிம்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். ஆனால் இன்று மேலும் தேய்வடைந்து 30 என்ற நிலையிலேயே உள்ளது.
மாநில வாரிய முஸ்லிம் எம்.பிக்களைப் பார்த்தேமானால் உத்தரப் பிரதேசத்தில் எட்டு எம்பிக்களும், மேற்கு வங்காளத்தில் 6பேரும், காஷ்மீரில் நால்வரும், பீகாரில் மூன்று பேரும், கேரளாவில் 3 பேரும், தமிழ்நாட்டில் இருந்து இரு வரும், அஸ்ஸாமிலிருந்து இருவரும் ஆந்திரா மற்றும் லட்சத்தீவுகளில் ஒருவரும் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டனர்.ராஜஸ்தான், மத்தியப் பிரசேதம், கர்நாடாக மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட செல்லவில்லை. தங்கள் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறித்து தீவிர மறு ஆய்வு நிகழ்த்த வேண்டிய நிலையில் சமுதாயம் உள்ளது.
Comments
Post a Comment