டெல்லியில் 400 ஆண்டுகால பள்ளிவாசலின் கட்டிடப் பகுதிகள் தகர்ப்பு! தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.

இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

வழக்கறிஞராக வேண்டுமா?

லண்டனில் த.மு.மு.க தலைவர்