யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.
ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.
ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.
இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.
லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.
Comments
Post a Comment